உள்நாட்டு செய்திகள்

அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிழக்கு கடற்பகுதி

சங்கமன்கண்டி இறங்குதுறையில் தீ விபத்தை எதிர்கொண்டுள்ள நியூ டயமன்ட் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் கசிந்து நாட்டின் கிழக்குக் கரையோரப்பகுதிகளில் படியுமானால் அவற்றில் 60 சதவீதமானவற்றை மாத்திரமே அகற்றக்கூடியதாக இருக்கும் என கடற்பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி, எண்ணெய்க் கசிவினால் அப்பகுதிகளில் ஏற்படத்தக்க நச்சுத்தன்மை, மாசடைவு என்பன முற்றாக நீங்கி அவை பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 25 முதல் 30 வருடங்கள் ஆகலாம் எனவும் சிலவேளைகளில் அது பழைய நிலைக்குத் திரும்பாமலே போகக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்குதுறையில் இருந்து 38 கடல் மைல் தொலைவுக்க அப்பால், கடற் பிராந்தியத்தில் இந்தியா நோக்கிச்சென்ற எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டது.

இந்தத் தீப்பரவலைத் தொடர்ந்து கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த எண்ணெய் கொள்கலன்களில் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா எனவும் அவ்வாறு கசிவு ஏற்படும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புக்கள் எத்தகையதாக இருக்கும் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்திருக்கின்றன.

இதுகுறித்து கடற்பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவிக்கையில், “இந்தக் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணெய் வெளியில் கசிய ஆரம்பிக்குமானால், அது இந்தப் பிராந்தியம் மாத்திரமன்றி முழு உலகமுமே எதிர்கொள்ள நேரிடும் மிகமோசமான சுற்றாடல் மாசடைவாக இருக்கும் என்றே நாம் கருதவேண்டும்.

அந்தளவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் உயர்வானதாக இருக்கலாம். அதேவேளை எண்ணெய் கடற் பிராந்தியத்திற்குள் கசிய ஆரம்பிக்குமானால், அது கட்டுப்படுத்தக்கூடிய நிலையைத் தாண்டிய பாரியதொரு சூழல் மாசடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்ற பிராந்தியம் தொடர்பாகவும் நாம் குறிப்பாக நோக்க வேண்டியிருக்கிறது. கிரிந்தவில் கிழக்கு நோக்கிப் பயணிக்கையில் எமது நாடு இலகுவில் பாதிப்படையத்தக்க ஒரு சூழலையே கொண்டிருக்கிறது. எனவே எண்ணெய்க் கசிவினால் இந்தப் பிராந்தியத்திற்கு ஏற்படத்தக்க தாக்கம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும்.

கப்பலில் இருந்து எண்ணெய் கசிய ஆரம்பிக்குமானால் அதனைத் தடுப்பதற்கோ அல்லது எதிர்கொள்ளத் தயாராகுவதற்கோ எமக்குப் போதியளவு கால அவகாசம் இல்லை.

இந்த எண்ணெய் கடலில் கலக்கும்போது அது கிறீஸ் போன்று மாற்றமடையும். அந்த கிறீஸ் அருகம்பை, நிலாவெளி, காயாங்கேணி, வாகரை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குப் பரவலடையுமாக இருந்தால் அந்தப் பகுதிகளில் உயர்வாக இருக்கும் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிப்படையும். அருகம்பை என்பது உலகலாவிய ரீதியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு சுற்றுலாத்தளம் ஆகும்.

எண்ணெய் கசிந்து இப்பகுதிகளில் படிந்தால் அதில் 60 சதவீதமானவற்றையே எம்மால் அகற்றக்கூடியதாக இருக்கும். 40 சதவீதமானவற்றை, அதாவது எண்ணெய்ப் படிமம் இன்றி முழுமையாக சுத்தப்படுத்துவது என்பது சாத்தியமற்றதாகும்.

அதுமாத்திரமன்றி, எண்ணெய்க் கசிவினால் அங்கு ஏற்படத்தக்க நச்சுத்தன்மை, மாசடைவு என்பன முற்றாக நீங்கி பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 25 முதல் 30 வருடங்கள் ஆகலாம். சிலவேளைகளில் அது பழைய நிலைக்குத் திரும்பாமலே போகக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top