அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமாக நவம்பர் மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையிலேயே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி இன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். கொரோனா பரவலை கையாண்ட விதம் குறித்து டிரம்ப் மீது பரவலான விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
கொரோனா பரவல், வேலையில்லாத் திண்டாட்டம் , இனப்பாகுபாடு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் அடிப்படையில் டிரம்ப் – பைடன் இருவருக்குமான போட்டி வலுவடைந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்க முடியுமென்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுவரை 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்காத பலரும் தாமாகவே முன்வந்து இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
