விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம் – சாதனை படைப்பாரா செரீனா?

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர், வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல், விடுதி மற்றும் ஸ்டேடியம் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது, விளையாடும் போது, சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. காயத்தால் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரும், கொரோனா அச்சத்தால் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோரும் விலகியிருப்பது ஜோகோவிச்சுக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 23 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வரும் அவர் முதல் சுற்றில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) சந்திக்கிறார். இந்த பட்டத்தை ஜோகோவிச் வசப்படுத்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் வரிசை யில் முதல் 2 இடங் களில் உள்ள பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), நடால் (19 கிராண்ட்ஸ்லாம்) ஆகியோரை 18 கிராண்ட்ஸ்லாமுடன் வெகுவாக நெருங்கி விடுவார். அவருக்கு 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெரேட்டினி (இத்தாலி), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றையரில் களம் காணும் ஒரே இந்தியரான சுமித் நாகல் முதல் சுற்றில் உள்ளூர் வீரர் பிராட்லி கிளானை எதிர்கொள்கிறார்.

பெண்கள் பிரிவிலும் நடப்பு சாம்பியன் பியான்கா (கனடா), ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் கொரோனா பீதியால் ‘ஜகா’ வாங்கி விட்டனர். இருப்பினும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா), ஜோஹகன்னா கோன்டா (இங்கிலாந்து), சபலென்கா, அஸரென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் வரிந்து கட்டி நிற்பார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இங்கு வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்த செரீனாவிடம் ஆக்ரோஷம் இருக்கிறதே தவிர, அதை வெற்றியாக மாற்றக்கூடிய சாமர்த்தியம் இப்போது குறைந்து விட்டது. 4 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் விலகியுள்ள நிலையில் செரீனா அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செரீனா முதல் சுற்றில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை சந்திக்கிறார். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.390 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.22 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெறுவார்கள். இறுதி சுற்றில் தோல்வி அடைபவருக்கு ரூ.11 கோடி கிடைக்கும். இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top