உள்நாட்டு செய்திகள்

அறக்கொட்டியான் தாக்கும் அபாயம் – அம்பாறை விவசாயிகளுக்கு எச்சரிக்கை

அம்பாறை மாவட்ட நெற்காணிகளில் இம்முறை பெரும்போகத்திலும் கபில நிறத்தத்திகளின் தாக்கம் (அறக்கொட்டியான்) குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கபில நிறத்தத்திகளின் தாக்கம் குறித்து விவசாயிகள் மிகவும் அவதானம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2019/20 பெரும்போகத்திலும், 2020 சிறுபோகத்திலும் நெற்பயிர்களை கபில நிறத்தத்திகள் வெகுவாகத் தாக்கின. இதனால் பெரும்போகத்தின் போது எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்காது விவசாயிகள் அதிகம் நஷ்டத்தை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதிகமான நெற்காணிகள் தற்போது அறுவடைக்குத் தயாராகி வரும் நிலையில் அறக்கொட்டியான் நோய்த் தாக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச ரீதியாக விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். நெற்செய்கையில் பாரியநஷ்டத்தை ஏற்படுத்தும் இந்நோய் தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர். இதுதொடர்பான கையேடுகளும் வெளிவந்துள்ளன.

கபில நிறத்தத்தி பூச்சிகள் நன்கு முற்றிப் பழுத்த நெற்கதிர்களின் சாற்றை உறிஞ்சிக் குடிப்பதனால் நெற்கதிர்கள் சத்தியற்றவையாக மாறுவதும், நெற்பயிர்கள் வைக்கோல் நிலைக்கு மாறுவதும் நோயின் தாக்கமாகும். ஆகையால், விவசாயிகள் தங்களது நெற்பயிரை அடிக்கடி அவதானித்துப் பார்க்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை, அதிகரித்த விதைநெல் பாவனை, மிதமிஞ்சிய உரப் பாவனை, வயலில் தொடர்ச்சியான நீர் கட்டல், அவசியமற்ற இரசாயனப் பாவனை போன்ற நிலைமைகளின் போது, அதிகம் நோய் தொற்றும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. தத்தி எரிவு, அப்ப எரிவு, குடலைக்கு முன்னர் நிறையுடலிகள் காணப்படல், நெற்பயிர் தண்டிலிருந்து, சாற்றை உறிஞ்சி எடுப்பதால் மஞ்சளாகி உலர்ந்து இறத்தல், எரிந்த மஞ்சள் நிற தாவரத் தொகுதி வட்டம் வட்டமாகக் காணப்படல், கதிர் பருவத்தில் அடிப்பகுதியில் சுமார் 5 முதல் 8பூச்சிகள் வரை காணப்படல், இலைமடல் அல்லது இலைத்தண்டில் முட்டை காணப்படல் என்பன நோய்த்தாக்கத்தின் அறிகுறிகளாகும்.

நெற்பயிர் தண்டின் அடிப்பகுதியில் நீர் மட்டத்திற்கு அண்மையில் கபில நிற, வெண்முதுகுத் தண்டுத் தத்திகள் காணப்படுமாயின் உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரசாயனப் பாவனை மூலம் இதன் பரம்பலைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயப் போதனாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். செறிவு கூடிய அல்லது நெருக்கமான நெற்பயிர்கள் காணப்படும் காணிகளில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் நாளுக்கு நாள் வேறு

பிரதேசங்களுக்கு பூச்சிகள் பரவி நெற்காணிகளை முற்றாகத் தாக்கி அழிக்கக் கூடியது எனவும், விளைச்சல் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நோய்த்தாக்கம், காணப்படும் நெற்காணிகளில் பூச்சிகளின் அளவுக்கமைவாக சிபார்சு செய்யப்பட்ட இரசாயனங்களைப் பாவித்து இதனை இலகுவாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இரசாயனங்கள் பாவனையின் போது, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது சிறந்தது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

விவசாயிகள் நெற்காணிப் பிரதேசங்களில் உள்ள நேரங்களில், சந்தையில் அல்லது பிரதான வீதியில் விழிப்பணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுவதனால் யாருக்கு நன்மை ஏற்படப் போகின்றது? என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. மற்றும் சில பிரதேசங்களில் நோய் தாக்கிய பின்னரே உத்தியோகத்தர்கள் உஷாரடையும் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விவசாயிகளின் நியாயமான ஆதங்கங்கள் தொடர்பில் விவசாயத் திணக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அவசர கவனம் செலுத்த வேண்டும். அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு நன்மையடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top