உலகம்

இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் திடீர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த தன்னார்வலர் பெயர் தீபக் மராவி (வயது42). போபாலில் உள்ள பீப்பிள்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த கோவேக்சின் பரிசோதனையில் அவரும் பங்கேற்றிருந்தார்.

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. தோள்பட்டையில் வலி உண்டானது. வாயில் இருந்து நுரை வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் டாக்டரிடம் செல்லவில்லை. ஓரிருநாளில் சரியாகி விடும் என்று இருந்து உள்ளார். தடுப்பூசி போட்டு 10 நாட்கள் ஆகியிருந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென அவரது உடல் நலம் மோசமானது. இதையடுத்து, அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்து உள்ளார்.

பிரேத பரிசோதனையில், அவர் விஷத்தின் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் உடல் உள்ளுறுப்பு பரிசோதனை மூலமே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னார்வலரின் மரணம் குறித்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு தெரிவித்து உள்ளதாக கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நடந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் தன்னார்வலர் உயிரிழந்தது தொடர்பாக கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வலர் பதிவு செய்த நேரத்தில் 3-ம் கட்ட பரிசோதனைக்கு பங்கேற்க ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்திருந்தார். தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏழு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில், அவர் ஆரோக்கியமாகவும், எந்த பின்விளைவுகளும் ஏற்படாமல் இருந்தார். அவர் 9 நாட்களுக்கு பிறகு தான் இறந்து உள்ளார். இது அவரின் மரணம் தடுப்பூசி ஆய்விற்கு சம்பந்தமில்லாதது என்பதை காட்டுகிறது. அவர், ஆய்வுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொண்டாரா அல்லது வேறு ஊசி எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை. இதை உறுதிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top