உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கையாலாகாத்தனம்

(Sivarajah Ramasamy-thamilan)

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பகிர்வதில் நீண்ட இழுத்தடிப்பைச் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச , அதனை தனது பங்காளிகளான தமிழ் , முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்காமல் வேறு சில உறுப்பினர்களுக்கு வழங்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தேர்தலுக்கு முன்னர் நடந்த பேச்சுக்களில் , தேசியப்பட்டியல் வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும் அதன்படியே அதனை சஜித் அணியிலுள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகள் கோரியதாகவும் செய்திகள் வெளிவந்தன.ஆனால் அது மறுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய சஜித் அணியின் பெரும்பான்மையோர் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவு காரணமாகவே தேர்தலில் ஓரளவு கரை சேர்ந்தது.ஆனால் தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த கொடூர இனவாத முகத்தை வேறுவடிவத்தில் காட்டி, அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று காட்டியிருக்கிறார் சஜித்.

பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி வழமைக்கு மாறாக கொழும்பிலும் , இரத்தினபுரி ,கேகாலை ,கம்பஹா மாவட்டங்களில் கூடுதலான அளவில் தமிழர் வாக்குகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு ஒரு ஆசனத்தை கொடுத்திருந்தால் அது அவர்களது கட்சிக்குள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டிருக்கும். தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத அந்த இடங்களில் மக்கள் நன்மைகளை பெற்றிருப்பார்கள்.

அதனைவிட பங்காளிகளான முஸ்லிம் கட்சிகள் சஜித் அணி வெற்றிக்கு பெரிதும் பங்களிப்பை செய்திருந்தன.ஆளுங்கட்சியின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் , சஜித் அணியின் தோல்வி தெரிந்திருந்தும் சில கொள்கைகளுக்காக முஸ்லிம்கள் ஆதரவளித்திருந்தனர். அதுதான் உண்மை.

ஆனால் தேர்தல் முடிந்த கையோடு அவர்களையெல்லாம் நிராகரித்து கட்சிக்காக உழைத்தார்கள் – கட்சிக்காக பாடுபட்டார்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் அவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

சஜித்தின் இந்த தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு அவருடன் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் சப்பைக்கட்டு கட்டுவார்கள் .அதற்கு ஒரு தனிவிளக்கம் அளிக்க முனைவார்கள்.ஆனால் அந்த வியாக்கியானங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வாக்காளர் பெருமக்கள் இல்லை என்பதே உண்மை.

தங்களுக்காக தேர்தல்களில் வாக்களிக்கவில்லை என்று முஸ்லிம்களையும் தமிழரையும் குறைகூறிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் தாராள இடத்தை தேசியப்பட்டியலில் வழங்கியுள்ளது.ஆனால் தமிழர் முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியலை வழங்கினால் சிங்கள மக்கள் ஏதாவது நினைப்பார்கள் என்று கருதி பத்தாம்பசளித்தனமாக செயற்பட்டுள்ளது சஜித் அணி.

சாதாரண ஒரு தேசியப்பட்டியலை நீதியாக பகிரத் தெரியாத இவர்கள்தான், தேசியப் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று நம்பி கடந்த தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தார்கள் என்பது பெருந்துயர். அடுத்த தேர்தலில் மக்கள் இதற்கான பதிலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சரி.தேசியப்பட்டியலுக்காக போராடுவதாக படம் காட்டிய சஜித் அணியில் உள்ள தமிழ் , முஸ்லிம் அரசியல் கட்சிகள் இனி என்ன செய்யும்? அதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த கட்சிகள் அவசர கூட்டங்களை கூட்டுவதாக அறிவிக்கும்.கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் சஜித் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கும்.பின்னர் எதிரணியில் தனியாக இருந்து என்ன செய்வது ? இதைவிட அரசில் இணையலாமே என்று கருத்தை பரவவிடும். அரசில் இணைய முயற்சிகளை எடுக்கும். மக்கள் நன்மைக்காக அவை தேவையான முடிவை எடுக்கலாம். ஆனால் மக்களை தேர்தல்களில் மடையர்களாக்கிவிட்டு , தேர்தலின் பின்னரும் முட்டாள்களாக்கிவிட்டு அரசியல் கட்சிகள் இப்படி நடந்துகொள்வது நியாயமானதா? பேரினவாத கட்சிகளிடம் இருந்து ஒரு தேசியப்பட்டியலையே பெறமுடியாத இவர்கள்தானா மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கப் போகிறார்கள்?

ஐக்கிய மக்கள் சக்தியின் கையாலாகாத்தனம் வெளிவந்து இப்போது அது ஐக்கிய மக்கள் சகதி என்றாகியிருக்கிறது நிலைமை. இந்த கையாலாகாத்தனத்திற்கு சஜித்துக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பதில் கூறியாக வேண்டும்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top