உள்நாட்டு செய்திகள்

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பாதிக்கப்படுவது உண்மையே!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாவும் சிறு தொகையான வேலை வாய்ப்புக்களே குறித்த பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்றது என்ற கருத்தில் உண்மை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.

அது விரலுக்கேற்ற வீக்கம் என்ற நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆனாலும் அறிவிக்கப்பட்ட திட்டம் பூரணப்படுத்தப்பட்ட பின்னரும் அதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதியளித்திருக்கின்றார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு என்பது ஜனாதிபதி அவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்ற விடயம். குறித்த நியமனங்களுக்கு சிபாரிசுகளை வழங்கும் வாய்ப்பினை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா சுமார் 600 தொடக்கம் 700 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக 5 தமிழ் நாடாளமன்ற உறுப்பினர்களும் 2 முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றோம்.

அந்தவகையில் குறித்த திட்டம் பூரணப்படுத்தப்படுகின்ற போது வடக்கு கிழக்குப் பிரதேசத்;தில் சுமார் 3000 தொடக்கம் 3500 வரையான தமிழ் இளைஞர் யுவதிகளுக்கும் அதேபோன்று சுமார் 1200 முஸ்லீம் இளைஞர் யுவதிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது போதுமானது அல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்காக குறித்த வேலைத் திட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்த முடியாது.

இந்த விடயத்தில் எமது மக்கள் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் நான் சொன்ன விடயங்கள்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் தற்போதைய அரசாங்கத்தினை தெரிவு செய்வதிலும் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருப்பார்களாயின், தற்போது காத்திரமான பங்காளர்களாக நிறைவான பலனைப் பெற்றிருக்க முடியும்.

எவ்வாறாயினும் இதுதொடர்பாக நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். வடக்கு கிழக்கு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதற்கான காரணங்களையும் என்னுடைய எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அறிவிக்கப்பட்ட திட்டம் பூரணப்படுத்தப்பட்ட பின்னர் அதுதொடர்பாக கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதியளித்திருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top