காத்தான்குடிப்பிரதேசம் எதிர்வரும் 15ம் திகதிவரை தனிமைப்படுத்தபட்டபிரதேசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கினைக்கும் அதிகாரி மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் கொவிட் தடுப்பு கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் முத்துலிங்கம் அச்சுதன் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தற்போது மாவட்டத்தில் எதிர்கொண்டுள்ள தொற்றினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
காத்தான்குடிப்பிரதேசத்தில் தற்போது தனிமைப்படுத்தல் அமுலில் உள்ளபோதிலும் மக்கள் எல்லைகளை கடந்து வெளியிடங்களுக்கு சென்றுவருவதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியதையடுத்து இன்றுமுதல் காத்தான்குடி எல்லைகளில் காவல் அரண்களை அமைக்க மேஜர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது மாவட்டத்தில் கொரனா தொற்றினை போக்க சுகாதார அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இக்கூட்டத்தில் மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது கொரனாவினால் மரணிக்கும் சடலங்களை சுற்றுவதற்கான பொலித்தீன்பைகள் ஐந்து மாத்திரமே காணப்படுவதாகவும் மேலதிகமாக பொலித்தின் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கவேண்டுமென கோரப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் தடுப்புப்பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்க கலந்துகொண்ட முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.(சுபிட்சம்)
