உலகம்

கோடாரியில் அடித்து கிணற்றில் தள்ளிய பாதிரியார்கள்.. அபயா கொலை வழக்கில் நடந்தது என்ன?

“காலை 4.15 மணியளவில், தனது விடுதி அறையிலிருந்து அடுப்பங்கரைக்குச் சென்றுள்ளார் அபயா. அங்கு பார்க்கக் கூடாத விஷயங்களைப் பார்த்திருக்கிறார்… கோடாரியால் அபயாவின் தலையில் அடித்தவர்கள், அவர் உயிருடன் இருக்கும்போதே…” – அபயா கொலை வழக்கில் என்ன நடந்தது?

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளுள், கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கும் ஒன்று. க்ரைம் சினிமாக்களை மிஞ்சும் வகையில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து, 1999-ல் சுரேஷ் கோபி நடிப்பில் `க்ரைம் ஃபைல்’ என்ற மலையாளப் படம் ஒன்று வெளியானது. அபயா கொலை வழக்கில் 28 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பு என்ன என்பது குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக இந்த கொலை கடந்த வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.

நடந்தது என்ன?

கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கோட்டயம் செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்த அபயா, 1992-ம் ஆண்டு, மார்ச் 27-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அந்த கான்வென்ட்டில் உள்ள கிணற்றிலிருந்து அபயாவின் உடல் மீட்டெடுக்கப்பட்டது. அப்போது அபயாவின் வயது 19.

கன்னியாஸ்திரி அபயா

கன்னியாஸ்திரி அபயா

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய கேரள போலீஸார், அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடித்தனர். ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, `அபயா வழக்கை சிபிஐ கையிலெடுத்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் (Jomon). இதையடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது கேரள உயர் நீதிமன்றம்.

சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டாவது சி.பி.ஐ குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். இரண்டாவதாக நியமிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ குழு விசாரணையில், அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் அவர்களால் கொலைக்கான நோக்கத்தையும், கொலை செய்தவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜோஸ், செஃபி, தாமஸ்

ஜோஸ், செஃபி, தாமஸ்

இரண்டாவது சி.பி.ஐ குழு தாக்கல் செய்த அறிக்கையும் திருப்தியளிக்கவில்லை என்பதால், 2007-ம் ஆண்டு மூன்றாவது சி.பி.ஐ விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில், முதலிலிருந்து புதிதாக விசாரணையைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டது. நந்தகுமார் நாயர் தலைமையிலான மூன்றாவது சி.பி.ஐ குழு நடத்திய விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கு தொடர்பாக, பாதிரியார்களான தாமஸ் கோட்டூர் (Thomas Kottoor), ஜோஸ் பூத்ருக்கயில் (Jose Poothrikkayil), கன்னியாஸ்திரி செஃபி (Sephy) ஆகியோரைக் கைது செய்தது சி.பி.ஐ. 

கொலைக்கான காரணத்தையும் சி.பி.ஐ குழு தாக்கல் செய்திருந்தது. கன்னியாஸ்திரி செஃபியுடன் பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் ஆகிய இருவரும் தகாத உறவு வைத்திருந்ததாகவும், செயின்ட் பயஸ் கான்வென்ட்டுக்கு இவர்கள் இருவரும் அடிக்கடி வந்து சென்றதாகவும் சி.பி.ஐ தெரிவித்தது. மேலும், கொலைச் சம்பவம் நடந்த அன்று இவர்கள் மூவரும் தகாத உறவு வைத்திருந்ததை அபயா நேரில் பார்த்துவிட்ட காரணத்தால், மூவரும் சேர்ந்து திட்டமிட்டு அபயாவை கொலை செய்துள்ளனர் என்றும் சி.பி.ஐ தெரிவித்திருந்தது.

“ மார்ச் 27, 1992-ம் தேதியன்று காலை 4.15 மணியளவில், தனது விடுதி அறையிலிருந்து அடுப்பங்கரைக்குச் சென்றுள்ளார் அபயா. அங்கு பார்க்கக் கூடாத விஷயங்களைப் பார்த்திருக்கிறார். தொடர்ந்து, காலை 4.15 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாகக் கோடாரி போன்ற உறுதியான இரும்பு ஆயுதத்தைக் கொண்டு அபயாவின் தலையில் அடித்துள்ளனர். பின்னர், அபயா உயிருடன் இருக்கும் பொழுதே அவரைக் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்” என்றும் சி.பி.ஐ தகவல் தெரிவித்தது.

2008-ம் ஆண்டு, குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2009-ம் ஆண்டு ஜனவரியில் மூவருக்கும் 6 மாத காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், குற்றம் சுமத்தப்பட்ட மூவரும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 9 ஆண்டுகள் கழித்துக் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த மனுவில் தீர்ப்பு வழங்கியது கேரள உயர் நீதிமன்றம். `போதிய ஆதாரங்கள் இல்லை’ என்று சொல்லி பாதிரியார் ஜோஸ் பூத்ருக்கயில், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து, இந்த வழக்கில் இவர்கள் இருவர் மீதான குற்றங்களில், விசாரணையைத் தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு

தீர்ப்பு

27 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதியன்று, திருவனந்தபுரம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. ஓராண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தீர்ப்பு!

திட்டமிட்ட கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்டவைக்காக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செஃபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இவர்கள் இருவருக்குமான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபயா கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த மனித உரிமை ஆர்வலர் ஜோமோன், இன்று தீர்ப்பு வெளியான பின்பு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கன்னியாஸ்திரி அபயா வழக்கில் இறுதியாக நீதி கிடைத்துள்ளது. இனி அபயா நிம்மதியாக ஓய்வெடுப்பார். அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் மூலம் நீதியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.

ஜோமோன், மனித உரிமை ஆர்வலர்

ஜோமோன்

“அபயாவின் கொலை வழக்கு சரிவர விசாரிக்கப்பட வேண்டுமென்று பல முயற்சிகளையும் போராட்டங்களையும் மேற்கொண்ட அவரது பெற்றோர்கள், இன்று அபயா வழக்கில் நீதி கிடைத்துள்ள சமயத்தில் உயிருடன் இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்” என்று கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top