ஆரோக்கியம்

சனி பகவானின் கடுமையை போக்கும் ஐயப்ப விரதம்

மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்ப- துன்பங்களை வழங்குபவர், சனி பகவான். உலக உயிர்களின் படைத்தல் தொழிலை செய்பவர், பிரம்மன். அவர்களை காக்கும் தொழிலை செய்பவர், மகாவிஷ்ணு. அழித்தல் தொழிலை செய்பவர், ஈசன். அதன்படியே உயிர்களின் கர்மவினைப்படி, அவர்களுக்கு பலன்களைக் கொடுக்கும் வேலையைச் செய்பவர், சனி பகவான். படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்கள் நின்றுவிட்டால் எப்படி உலகம் இயங்காதோ, அப்படித்தான், கர்மவினைகளுக்கு ஏற்ப சனி பகவான் பலன்கள் வழங்குவதை நிறுத்தி விட்டாலும், உலக இயக்கம் தடைப்பட்டுப் போகும்.

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், தன்னுடைய பக்தர்களுக்கு சனியின் 7½ ஆண்டு பிடியில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டார். அதற்கு பதிலளித்த சனி பகவான், “அவ்வாறு செய்வதால், உலகின் இயக்கம் தடைபட்டுப் போகும். எனவே அதனைச் செய்ய இயலாது” என்று மறுத்து விட்டார்.

இருப்பினும் விடாமல், சனி பகவானிடம் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி கேட்டார், ஐயப்பன். அதோடு 7½ ஆண்டுகளில் கர்ம வினைகளுக்கு ஏற்ப வழங்கும் தண்டனையை, என்னை வழிபடும் பக்தர்களை ஒரு மண்டல கால விரதத்தில் செய்ய வைப்பதாகவும், அவ்வாறு செய்தால் தன்னுடைய பக்தர்களுக்கு ஏழரை ஆண்டு தண்டனையில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார்.

அதைக் கேட்ட சனி பகவான், “முதலில் ஏழரை ஆண்டுகளில் நான் அளிக்கும் கர்மவினையின் பலன்களைப் பற்றி கூறுகிறேன். அதன்பிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்றார். பின்னர் அந்த பலன்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார். “விதவிதமான உணவு உண்டு, பழச்சாறுகளை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன்.

அதனால் அவர்கள் பட்டினியிலிருந்து தப்பிக்க முடியாது. மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட, கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன். முக்கிய விஷயம் என்னவென்றால், சிலரின் கர்மவினைப் பயனாக, என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள். கட்டிக்கொள்ள உடை இல்லாமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னைத் தானே கண்டுகொள்ள முடியாத படி, உருவம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன். மனம் மிகு பன்னீரில் குளித்தவர்களைக் கூட, நான் வெறும் தண்ணீருக்கே அல்லாட வைப்பேன்” என்று பட்டியலிட்டார்.

உடனே ஐயப்பன், சனி பகவானின் ஏழரை ஆண்டு தண்டனையை, ஒரு மண்டலத்தில் பொருந்தும்படி ஒவ்வொன்றுக்காக விளக்கம் அளித்தார். அதன்படி “என்னுடைய பக்தர்கள் எளிமையான உணவை, அதுவும் ஒருவேளை மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். அதோடு அவர்கள் கட்டில் போன்ற ஆடம்பரங்களின் மேல் நாட்டம் வைக்காமல், என்னை நினைத்து விரதம் இருக்கும் ஒரு மண்டல காலமும், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள்.

அந்த விரத காலத்தில் திருமணமானவராக இருந்தால், கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, காலில் காலணி இல்லாமல் காடு மேடுகளைக் கடந்து, என்னை தரிசிக்க வருவார்கள். மேலும் உனக்கு பிடித்த வண்ணமான கருப்பு நிறத்தில் மட்டுமே, விரத காலம் முழுவதும் ஆடை அணிவார்கள். என்னை நோக்கி விரதம் இருக்கும் அந்த ஒரு மண்டல காலமும், என்னுடைய பக்தர்கள் அவர்களை அழகுபடுத்திக்கொள்ளாமல், சுகங்களை தியாகம் செய்து பக்தி சிரத்தையோடு, நீங்கள் சொன்ன பலன்களை அனுபவித்தபடியே என்னை வழிபட வருவார்கள். காலையிலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் குளித்து விரதத்தை மேற்கொள்வார்கள்.”

சபரிமலை தர்ம சாஸ்தாவான, ஐயப்பனின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார் சனி பகவான். அதன்படியே இன்றளவும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே ஐயப்பனை நோக்கி விரத முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், சனி பகவானின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top