அரசாங்க மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இடம்பெற்றது. குறித்த குழந்தைகள் விடுதியில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், ஒக்சிஜன் வசதியுடன் வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலை 2 மணிக்கு புகை வருவதை பணியில் இருந்த தாதி கவனித்துள்ளார். குழந்தைகள் இருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, கண்தெரியாத அளவிற்கு முற்றிலும் பெரும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. பணியில் இருந்த மருத்துவர் மற்றும் பிற ஊழியர்களை உதவிக்கு அழைத்து 7 குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அதற்குள் 10 குழந்தைகளின் உயிர்கள் அநியாயமாக பறிபோய்விட்டன.
அதில் 3 குழந்தைகள் தீக்காயங்களாலும், 7 குழந்தைகள் மூச்சுத் திணறியும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பந்தாரா சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலைமதிப்பற்ற பிஞ்சு உயிர்களின் இழப்பு, இதயத்தை கலங்க வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
