உள்நாட்டு செய்திகள்

தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்!

(Purusoth thankamayil)

தேர்தல் அரசியல் என்பது பரமபத (ஏணியும் பாம்பும்) விளையாட்டு போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும், எதிர்த்தரப்புக்களும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காக பாம்புகளாக காத்துக் கொண்டிருக்கும். அப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே பரமபதம் ஆடி தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும் இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாக தோற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கின்றது. தேர்தல் தோல்வி, தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனச் சர்ச்சை, சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்ட பிரச்சாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் மத்திய குழுக் கூட்டத்தில் சூடான வாதங்களுக்கு வித்திடும். அத்தோடு, இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சி யாரின் அதிகார வளையத்துக்குள் சென்று சேரப்போகின்றது என்பதற்கான சில ஏற்பாடுகளையும் செய்யக்கூடும்.

தமிழ்த் தேசிய அரசியலில், ஒரு கட்சிக்குரிய கட்டமைப்பு சார் அடையாளத்தை தமிழரசுக் கட்சி ஓரளவுக்கு பேணி வந்திருக்கின்றது. தொகுதிக் கிளை தொடக்கம் மாவட்டக் கிளை, வாலிபர் முன்னணி, மத்திய குழு, வேட்பாளர் நியமனக் குழு, அரசியல் குழு என்றெல்லாம் அந்தக் கட்சி தன்னுடைய கட்டமைப்பைப் பேணுகின்றது. ஆனால், அந்தக் கட்சி உண்மையிலேயே கட்சிக்குரிய கட்டமைப்பு மற்றும் அதன் அதிகார வரம்புகள் தொடர்பில் தெளிவான வரையறைகளைக் கொண்டிருக்கின்றதா என்றால், இல்லை என்பதே பதில். கட்சியின் எந்தவொரு தீர்மானமும் கட்சிக்குள் ஜனநாயக முறைப்படி விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஒழுகுவதுதான் அடிப்படைப் பண்பு. ஆனால், தமிழரசுக் கட்சியையும், அதன் தீர்மானங்களையும் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பொது வெளியில் விமர்சித்த அளவுக்கு யாரும் இதுவரை விமர்சித்திருக்கவில்லை.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அன்று இரவு, யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி முக்கியஸ்தர்களாக தங்களை முன்னிறுத்தும் நபர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்களை நோக்கி நடத்திய தூசண வசைகளை நூற்றுக்கணக்கான பேஸ்புக் நேரடிக் காட்சிகள் ஒளிபரப்பின. தேர்தல் தோல்வி உள்ளிட்ட கட்சியின் பின்னடைவுகளுக்கான காரணங்களை நியாயமான முறையில் தேடுவதற்கான புத்தியுள்ள தொண்டர்களையும் தலைவர்களையும் கொண்டிருக்காத கட்சியொன்று என்றைக்குமே மீண்டெழாது. தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் பொது வெளியில் ரவுடிக் கூட்டங்களினால் நிரம்பியிருக்கின்ற கட்சிக்குரிய காட்சிகளை தமிழரசுக் கட்சி பிரதிபலித்தது. (அதற்கான ஆதாரங்களை அந்தக் கட்சியின் வேட்பாளர்களே சேகரித்து கட்சியின் தலைமையிடம் கையளித்திருப்பதாக தெரிகின்றது.) அப்படியானதொரு நிலையை, தமிழரசுக் கட்சியும், அதன் தலைமையும் கட்டி வளர்த்திருக்கின்றது என்பதே, அதன் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணங்களாகும்.

பங்காளிக் கட்சிகளை கிஞ்சித்தும் மதிக்காது கூட்டமைப்புக்குள் தனியாவர்த்தனம் நடத்துவதிலேயே தமிழரசுக் கட்சி கடந்த பதினொரு ஆண்டுகளில் கவனம் செலுத்தி வந்திருக்கின்றது. அந்த தனியாவர்த்தனம் என்பது, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மனநிலையை ஒத்தது. அதுதான், அந்தக் கட்சியின் அனைத்துக் கட்டமைப்புக்குள்ளும் விரவிப் படர்ந்திருக்கின்றது. உட்கட்சி ஜனநாயகம் என்பதற்கும், கட்சியின் தீர்மானங்களை பொது வெளியில் கேள்விக்குட்படுத்தும் நிலைக்குமான வித்தியாசங்களை தமிழரசுக் கட்சியின் தலைவர் தொடங்கி இறுதித் தொண்டன் வரை கற்றுத் தெளிய வேண்டியிருக்கின்றது. இவ்வாறான நிலைகள் தொடர்பில் விமர்சனத்தை முன்வைத்ததும், “எங்களின் சொந்தக் கட்சி விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதுபற்றி மற்றவர்கள் (மக்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்புக்கள்) கவலை கொள்ளத் தேவையில்லை.” என்கிற வார்த்தைகளைத் தூக்கிக் கொண்டு கட்சிக்காரர்கள் வருவார்கள்.

முதலில், கட்சி என்பது மக்களுக்கானது என்கிற அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஆதாரமாகக் கொள்ளாத யாரும், எந்தத் தரப்பும் மேலெழ முடியாது. அப்படியான நிலையில், ஒரு கட்சியின் தோல்வி என்பது, பல நேரங்களில் அந்தக் கட்சியை நம்பி வாக்களித்த மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த சனக்கூட்டத்தையும் தோற்கடித்துவிடும். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி போன்ற ஒரு கட்சிக்கான கடப்பாடு என்பது, ஒவ்வொரு தமிழ் மகனிடமும் மகளிடமும் பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கின்றது. அதனை அடிப்படையில் இருந்து அந்தக் கட்சி பேண வேண்டும். அதனை ஒரு அரசியல் நெறியாகப் பேணாது, தண்டல்காரன் மனநிலையைப் பேணிக் கொண்டிருப்பதானது, அந்தக் கட்சியை மண்ணோடு மண்ணாகச் சேர்த்துவிடும் நோக்கங்களைக் கொண்டது.

கூட்டமைப்பின் தோல்வி என்பது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியாலேயே நிகழ்த்திருக்கின்றது. கட்சியின் தலைவர் தொடங்கி கடைசித் தொண்டன் வரை வெற்றிக்காக உழைத்ததைக் காட்டிலும், சொந்தக் கட்சிக்குள்ளேயே மற்ற வேட்பாளர்களை தோற்கடிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் போன்ற தமிழ் மக்களின் அடர்த்தி 97 வீதத்துக்கும் அதிகமுள்ள மாவட்டத்தில் போட்டியிட்டு, கட்சியின் தலைவர் வெற்றிபெற முடியவில்லை என்பது தமிழரசுக் கட்சியின் மோசமான நிலையைக் காட்டுகின்றது. மாவை சேனாதிராஜா இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதும் அவரின் வெற்றி குறித்து அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். கட்சியொன்றின் தலைமை தோற்பது, தன்னுடைய தோல்வியாக கட்சிக்காரன் சிந்திக்க வேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் அவ்வாறான நிலையொன்று எந்தவொரு தருணத்திலும் பேணப்படாது, குழும மனநிலை மேழுந்திருந்தது.

அதிக தருணங்களில் கட்சித் தலைவருக்குரிய பண்புகளை மறந்து, விருப்பு வாக்குகளுக்காக குழும மனநிலைக்குள் சிக்கிக் கொண்டு மாவையும் செயற்பட ஆரம்பித்தார். சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிக தடவைகள் மாவையிடம் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அவை குறித்து அவர் கருத்தில் எடுக்கவில்லை. மாறாக, அவ்வாறான செயற்பாடுகளை அவர் ஊக்குவித்தார். குறிப்பாக, கட்சியின் பொருளாளரான கனகசபாபதியும், யாழ் மாவட்ட வாலிபர் முன்னணி முக்கியஸ்தர் கலையமுதனும் (மாவையின் மகன்) எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் போன்றவர்களுக்கு எதிராக வீடு வீடாகச் சென்று பிரச்சாரப் பண்ணும் அளவுக்கு நிலை சென்றிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில், திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் சிறீதரனால், மாவைக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் போன்று நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு.

தமிழரசுக் கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராயும் நோக்கில் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் மாவை கவனம் செலுத்தியுள்ளதாக தெரிகின்றது. தேர்தல் காலத்தில் சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பில் சிறீதரன் ஒளி, ஒலி ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையை கட்சித் தலைமையிடம் சமர்பித்துள்ளார். அந்தப் பின்னணியில், சுமந்திரனும், மாவையும் கூட தங்களுடைய அறிக்கைகளை மத்திய குழுவில் சமர்ப்பிக்கவுள்ளனர். ஒரு கட்சியாக அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், ஆராய்வதும் மாத்திரம் நிலைமைகளைச் சரி செய்யும் என்றில்லை. மாறாக, விடயங்களை அதன் உண்மைத்தன்மைகளின் போக்கில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதுதான், எதிர்காலத் தோல்விகளைத் தவிர்ப்பதற்கான வழி. அதனை விடுத்து, ‘பார்ப்போம் தம்பி’ என்கிற மனநிலை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையை ஏற்படுத்தி விடும். சொந்தத் தோல்வியிலிருந்தாவது மாவை அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்; அடுத்த கட்டங்களைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் உண்மையான விடயங்களைக் குறித்து கரிசனை கொள்வதைக் காட்டிலும், கட்சிக்குள் யாருக்கு ஆதரவுத் தளம் அதிகமிருக்கின்றது என்பதை நிரூபிக்கும் காட்சிகளை அரங்கேற்றப் போகின்றது. ஏனெனில், மத்திய குழுவுக்குள் யாருக்கு அதிக ஆதரவு இருக்கின்றது என்பது குறித்து குழுக்களை சேர்க்கும் நடவடிக்கைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன. கிட்டத்தட்ட தேர்தலில் வென்றவர்கள் ஓரணியிலும், தேர்தலில் தோல்வியுற்று அடிபட்ட பாம்புகளாக காத்திருப்பவர்கள் மற்ற அணியிலும் இணைந்திருப்பதாக தெரிகின்றது. அது, கட்சிகளை சீரமைப்பதற்கான வழிகளாக தெரியவில்லை. மாறாக, இன்னும் இன்னும் சீரழிப்பதற்கான காட்சிகளாகவே விரிகின்றன.

-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான பத்தி.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top