ஆன்மீகம்

தானமும்.. அதற்கான புண்ணியமும்..

ராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ராமகாவியம், இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் எழுதியவர்களின் பெயர்களை முதன்மையாக கொண்டு வெளிவந்திருக்கிறது. மூலக் கதையான ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. ஆனால் அவரைத் தொடர்ந்து தமிழில் கம்பர் எழுதிய ‘கம்ப ராமாயணம்’, துளசிதாசர் எழுதிய ‘துளசி ராமாயணம்’ ஆகியவை பிரசித்தமானவை. இப்படி இந்திய மொழிகள் அனைத்திலும், கவிஞர்கள் ராமாயணத்தை இயற்றியுள்ளனர். வங்க மொழியில் கீர்த்திவாசர் என்பவரும் ராமாயண காவியத்தை எழுதியுள்ளார். அதில் ஒரு நிகழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார். அதை இங்கே பார்ப்போம்..

சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு துணையாக விபீஷணனின் மகளான திரிசடை இருந்தாள். ஒரு நாள் திரிசடை, சீதையை அழைத்துக்குக் கொண்டு அசோகவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்றாள். அங்கு ஓர் அம்மிக்கல் இருந்தது.

“திரிசடை.. இதைப் பார்ப்பதற்காகவா என்னை இங்கே அழைத்து வந்தாய்? இது வெறும் அம்மிக்கல் தானே. இதில் என்ன விசேஷம் இருக்கிறது?” என்று கேட்டாள், சீதை.

“இது சாதாரண அம்மிக்கல் இல்லை, சீதாதேவி. இந்த அம்மிக்கல்லில் அரைக்கப்படும் பொருட்களின் வாசனைகள் அதிக நறுமணத்தைக் கமழும். சுவையும், குணங்களும் அதிகரிக்கும்” என்றாள், திரிசடை.

இதைக்கேட்டு வியந்த சீதாதேவிக்கு, எல்லா பெண்களுக்கும் ஏற்படும் ஆசையே ஏற்பட்டது. அந்த ஆசையால் “அப்படியா? ஸ்ரீராமருடன் அயோத்திக்குச் செல்லும்போது இந்த அம்மிக்கல்லையும் என்னுடன் எடுத்துச் செல்வேன்” என்றாள்.

அதன்பிறகான சில காலத்தில் ராவணனுக்கும், ராமருக்கும் போர் ஏற்பட்டது. அந்த போரில் ராணவன் கொல்லப்பட்டதும், விபீஷணன் இலங்கை மன்னனாக முடிசூட்டிக்கொண் டான். ராமர் உள்ளிட்ட அனைவரும் அயோத்திக்கு திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது சீதைக்கு அந்த அம்மிக்கல் நினைவுக்கு வந்தது.

சீதை, அனுமனிடம் அந்த அம்மிக்கல் பற்றி கூறி, “வீரனே.. சிறப்பு வாய்ந்த அம்மிக்கல்லை நம்முடன் அயோத்திக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதை கவனமாக எடுத்துவா” என்று கூறினாள்.

அப்போது அங்கு வந்த ஜாம்பவான், “தேவி.. ஸ்ரீராமர் இலங்கையை விபீஷணனுக்கு தானமாக அளித்துவிட்டார். தானம் கொடுத்தவர், தானம் பெற்றவரிடம் இருந்து எந்தப் பொருளையும் மீண்டும் பெறக்கூடாது. தானம் வழங்கியவனே மனம் மகிழ்ந்து தந்தாலும் கூட அதை ஏற்கக்கூடாது. இதனால் நாம் செய்த தானத்தால் கிடைக்கும் புண்ணியத்தை இழந்துவிடுவோம்” என்று எடுத்துரைத்தார்.

இதனால் பதறிப்போன சீதை, “சரியான நேரத்தில் சரியான விஷயத்தைச் சொல்லி என்னை பாவத்தில் இருந்து காப்பாற்றினீர்கள். ராமர் செய்த புண்ணியம் உங்களால் காப்பாற்றப்பட்டது” என்று ஜாம்பவானை வணங்கினாள்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top