தைப்பொங்கல் தினத்தன்று, கோவில்களில் கொரோனா சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாவிடின், கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்று, வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டச் செயலகத்தில், நேற்று (12) கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கோவிலுக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களாலும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுமெனவும் தெரிவித்த இந்து மதகுருக்கள், எனவே, இது தொடர்பாகவும் ஆராயவேண்டுமென்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார்.
