பொழுது போக்கு

நடிகை சித்ராவின் செல்போனால் வெளிவந்த உண்மைகள் – தற்கொலைக்குத் தூண்டியது யார்?


நடிகை சித்ராவின் செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்தபோது சில முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவரின் வாட்ஸ்அப்புக்கு வந்த மெசேஜ்கள் அடிப்படையிலும் சித்ராவின் அம்மா குற்றம்சாட்டிய ஹேமந்த்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

https://fb.watch/2jNTfsQoOJ/

நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த 9-ம் தேதி அதிகாலையில் ஷூட்டிங் முடிந்து பூந்தமல்லி அருகேயுள்ள ஹோட்டல் அறைக்கு கணவர் ஹேமந்த்துடன் வந்த சித்ரா, அடுத்த சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கியிருக்கிறார். அவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், சித்ரா தற்கொலைதான் செய்திருக்கிறார் என்று போலீஸாரிடம் கூறியிருக்கின்றனர். அதனால், சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்றும், அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்ற கோணத்திலும் நசரத்பேட்டை போலீஸார் விசாரித்துவருகின்றனர்

அம்பத்தூர் துணை கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் விசாரணை நடத்தினர். சித்ராவின் செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சித்ராவின் செல்போனுக்கு தினேஷ் என்பவர் அடிக்கடி போனில் பேசிவந்திருக்கிறார். யார் அவர் என்று போலீஸார் விசாரித்தபோது தினேஷ்தான், சித்ரா கலந்துகொள்ளும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் சித்ரா தொடர்பான தகவல்களை தினேஷிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

இந்தநிலையில் சித்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கடைத் திறப்புவிழாவுக்கு சென்றிருக்கிறார். அந்த விழாவில் அறிமுகமான அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவின் செல்போன் நம்பருக்கு `குட்மார்னிங்’, `குட்நைட்’ என்ற மெசேஜ்களை முதலில் அனுப்பிவந்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் நட்பாக மெசேஜ் மூலம் தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்த அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். சித்ராவின் செல்போனில் சில தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர். அதனால் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்

சித்ராவின் மரணம் தொடர்பாக பல கோணங்களில் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். டிசம்பர் 9-ம் தேதி அமைதியாக இருந்த அவரின் அம்மா விஜயா, டிசம்பர் 10-ம் தேதி கண்ணீர்மல்க மீடியா முன் சில தகவல்களை வெளிப்படையாகக் கூறினார். அதில், ஹேமந்த் மீது சரமாரியாகக் குற்றம்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டுக்களை ஹேமந்த்தின் பெற்றோர் மறுத்திருக்கின்றனர். ஹேமந்த்தான் சித்ராவை அடித்துக் கொலை செய்திருக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டை சித்ராவின் அம்மா விஜயா கூறியதால், அது தொடர்பாக போலீஸார் விசாரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.

சித்ரா, தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலை அவரின் ரசிகர்களும், நெருங்கிய தோழிகளும் இன்னமும் நம்ப மறுத்துவருகின்றனர். ஆனால், போலீஸாரோ சித்ரா தற்கொலைதான் செய்திருக்கிறார் என்று கூறிவருகின்றனர். சித்ராவின் முழு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற தகவல் தெரியவரும். இதற்கிடையில் ஹேமந்த் தொடர்பாக போலீஸாருக்குக் கிடைத்த தகவல்கள் சித்ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு திருமணம் நடத்த முடிவு செய்திருந்த நேரத்தில், எதற்காக அவசரப்பட்டு கோடம்பாக்கம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால், சித்ராவின் திருமணத்துக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அவரின் குடும்பத்தினரிடமும் ஹேமந்த்திடமும் போலீஸார் விசாரித்திருக்கின்றனர். அது தொடர்பாகவும் சில தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்திருக்கின்றன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top