உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கடும் மழை – சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 18 மணித்தியாலங்கள் நாட்டின் பல மாவட்டங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதியாக இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருணாகலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள் அகலவத்தை பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டம் – அகலவத்தை பிரதேசத்தில் 177 தசம் 5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கெசெல்ஹெனாவ பிரதேசத்தில் 171 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பண்டாரகம பிரதேசத்தில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், காலி மாவட்டம் – வந்துரம்ப பிரதேசத்தில் 146 தசம் 5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கேகாலை மாவட்டம் – வறக்காபொல பிரதேசத்தில் 125 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்த, ஹொரணை மற்றும் புளத்சிங்ஹள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மக்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதுரங்குளி, தலகஸ்வெவ, ஹுனுகல்லேவ, மன்னம்பிட்டிய மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில், இன்று மதியம் 12.09 அளவில், சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top