அரசியல்

நாம் முடியாது எனக் கூறும் அரசாங்கமல்ல – கல்முனையில் பிரதமர் மஹிந்த!

எமது அரசாங்கம் எதையும் முடியாதெனக்கூறும் அரசாங்கமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை நகரசபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நல்லிணக்கம் என்ற பெயரில் அமைச்சு ஒன்று காணப்பட்ட போதிலும் நாட்டிற்கு கிடைத்த நல்லிணக்கம் ஒன்றுமில்லை. கொழும்பு ஹோட்டல்களில் பட்டறைகள், விளம்பர வேலைத்திட்டங்களை மேற்கொண்டு கோடி கணக்கிலான பணத்தை செலவு செய்த கடந்த அரசாங்கத்தினர் இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
30 வருடங்களாக காணப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். இலட்ச கணக்கிலான மக்களுக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி நிம்மதியை பெற்றுக் கொடுத்தோம். கடந்த நல்லாட்சி அரசாங்கம் கடன் பெற்றுள்ளது, அதனால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதென நாங்கள் கூறவில்லை. கூறவும் மாட்டோம். நாங்கள் எப்படியும் இல்லை என்றும் கூற மாட்டோம். முடியாது என்றும் கூற மாட்டோம்.

நல்லிணக்கம் என கூறி கோடி கணக்கிலான பணத்தை கொழும்பில் இருந்து செலவு செய்து, இந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை மறந்து போலியான வேலைகளுக்கு பணம் செலவிடவும் மாட்டோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினர் மத்திய வங்கியை உடைத்து பல பில்லியன் பணத்தை கொள்ளையடித்தார்கள். அவர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கும் போது கல்முனை மக்கள் நுண் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டனர். நீங்கள் கடந்த முறை தேர்தல்களில் உங்கள் வாக்குகளை யானைக்கு வழங்கினீர்கள். எனினும் காட்டு யானைகளிடம் இருந்து உங்களை காப்பாற்றுவதற்கு அந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. இன்னமும் இந்த பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை போன்று விவசாயத்தையும் காட்டு யானைகள் அழிக்கின்றன.

நாங்கள் எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தினுள் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும். இன்று கொவிட் 19 காரணமாக சுற்றுலா பயணிகள் வரவில்லை என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்தவுடன் நாங்கள் இந்த மாகாணங்களுக்கு முதன்மை இடத்தை வழங்க வேண்டும். அம்பாறை என்பது நிர்வாக நகரமாகும்.
நாங்கள் அம்பாறை நகரத்தை நிர்வாக கேந்திர வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த பிரதேசங்களில் நீர்பாசன துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல நாங்கள் இந்த மாகாணங்களில் மக்களின் நீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இங்குள்ள குளங்களை மீள் திருத்தம் செய்வதுடன் புதிய குளங்களை அமைக்க வேண்டும். நீங்கள் வீடுகளில் இருந்து ஆடை தொழிற்துறை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கை கொடுப்போம். ஆடைத் தயாரிப்புகளுக்கு சிறந்த சந்தை ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்” என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top