ஆன்மீகம்

பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோயில் சுவர் கட்ட அனுமதி

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில், இந்து சமூகத்தினர் ஒரு சுடுகாட்டை அமைத்துக் கொள்ளவும், ஏற்கனவே கட்டுவதாகக் கூறபட்டிருந்த கிருஷ்ணர் கோயிலைச் சுற்றி சுவர் எழுப்பிக் கொள்ளவும், இஸ்லாமாபாத்தின் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுமதியளித்திருக்கிறது. இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயிலைக் கட்டும் பணியில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று இதை ஆளும் பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சியின் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து தலைவருக்கு, இஸ்லாமாபாத் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுப்பிய கடிதத்தில், இந்து சமூகத்தினருக்கான கோயில், சமூகக் கூடம் மற்றும் சுடுகாட்டை கட்டிக் கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுமானங்கள் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஹெச்-9-2 என்கிற பகுதியில் நடக்கவிருக்கிறது.

அந்தக் கடிதத்தின்படி, இந்த கட்டடங்களின் சுற்றுச் சுவர்கள் ஏழு அடிக்கு மேல் உயரமாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு, நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் இருந்தபோது, இந்து கோயில், சுடுகாடு மற்றும் சமூகக் கூடத்தைக் கட்டிக் கொள்ள, இந்து சமூகத்தினருக்கு ஹெச்-9-2 பகுதியில் நான்கு மார்லா (1 மார்லா என்பது சுமாராக 25 சதுர மீட்டர்) நிலம் ஒதுக்கப்பட்டது. இங்குதான் கிருஷ்ணா வளாகத்தை இந்து சமூகத்தினர் நிர்மாணிக்க இருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே, அரசியல் வட்டாரங்கள் மற்றும் மத வட்டாரங்களில், இந்து கோயில் கட்டுமானத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. லாஹூரில் இருக்கும் ஜாமியா அஸ்ரஃபியா மத்ராசாவைச் சேர்ந்த முஃப்தி மொஹம்மத் சகரியா, இந்து கோயில் கட்டப்படுவதை எதிர்த்து ஃபத்வா வெளியிட்டார். சிறுபான்மை சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை பராமரிக்கவும், மராமத்துப் பணிகளைச் செய்யவும் இஸ்லாத்தில் இடம் இருக்கிறது. ஆனால் புதிய வழிபாட்டுத் தளங்களைக் கட்ட அனுமதிக்கப்படவில்லை என அந்தப் ஃபத்வாவில் குறிப்பிட்டிருந்தார். இந்து கோயில் கட்டப்படுவதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இஸ்லாமாபாத்தின் நகர மேம்பாட்டுத் திட்டத்தில், இந்த கோயில் கட்டுமானம் குறிப்பிடப்படவில்லை என்பதை, இந்த கட்டுமானம் நிறுத்த, ஒரு காரணமாக முன் வைத்தார்கள். உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது.

இந்து கோயிலுக்கு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கப்படவில்லை என்றாலும், இஸ்லாமாபாத் நகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு, தலைநகரின் எந்த பகுதியிலும் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கினார் உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் ஃபாரூக். பாகிஸ்தான் அரசு, இஸ்லாமிய கருத்தியல் சபையிடம் இந்து கோயில் கட்டுவதைக் குறித்து கருத்து கேட்டது. இந்து கோயில் நிர்மாணிக்கப்படுவதை ஆதரித்தது அந்தச் சபை. அதோடு, இந்து சமூகத்தினர்கள், தங்களின் சமயச் சடங்குகளைச் செய்ய, அரசியலமைப்பு ரீதியாகவே அவர்களுக்கு உரிமை இருக்கிறது எனக் குறிப்பிட்டது. இந்து சமூகத்தினர், தங்களின் திருமணம், இறுதிச் சடங்கு போன்ற மத ரீதியிலான கடமைகளைச் செய்ய, ஓர் இடத்தை வழங்க வேண்டும் என்பதை, பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது இஸ்லாமிய கருத்தியல் சபை. பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த லால் சந்த் மால்ஹி (இவர் பாகிஸ்தானின் தேசிய சபை உறுப்பினர்) இந்து கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சிறுபான்மை சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கோயில்களைக் கட்டிக் கொள்ளலாம் என இஸ்லாமிய கருத்தியல் சபை தெளிவுபடுத்தி இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார் மால்ஹி. தற்போது, இஸ்லாமாபாத்துக்கு அருகில் ராவல்பிண்டியில் மக்கள் சென்று வரும் இந்து கோயில்களைத் தவிர, கடஸ் ராஜ் & டக்ஸிலா போன்ற அகழ்வாராய்ச்சிப் பகுதிகளில் பல இந்து கோயில்கள் இருக்கின்றன. இஸ்லாமாபாத்தில், சயீத்பூர் பகுதியில் ஒரு கோயில் இருந்தது. அந்தப் பகுதியை தேசிய பாரம்பரிய பகுதியாக அறிவித்த போது, அந்தக் கோவிலை மறுகட்டுமானம் செய்தார்கள். அது ஓர் அடையாளக் கட்டடம். அந்தக் கோவில், இஸ்லமாபாத்தில் வாழும் இந்து சமூகத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்கிறார் இஸ்லாமாபத் இந்து பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ப்ரீதம் தாஸ். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்தின் கணக்குப் படி 3,000 இந்துக்கள் இஸ்லாமாபாத்தில் வாழ்கிறார்கள். இந்து சமூகத்தினர் தங்களின் சடங்குகளைச் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. ஒருவர் இறந்துவிட்டால் கூட அவருக்கு இறுதி மரியாதை செய்ய இடமில்லை. இந்து சமூகத்தினர் தீபாவளி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளைக் கொண்டாட ஒரு சமூகக் கூடம் இல்லை. இறுதியாக அரசு எங்கள் குரலுக்கு செவி சாய்த்தது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ப்ரீதம் தாஸ். இந்து சமூகத்தினருக்கான சுடுகாடு, இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டது என்கிறார் பாகிஸ்தானின் தேசிய சபை உறுப்பினரான லால் சந்த் மால்ஹி. சமீபத்தில் ஒரு வியாபாரியின் தந்தை இறந்தபோது, அவருடைய இறுதிச் சடங்கு இங்குதான் நடந்தது என்கிறார் மால்ஹி.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top