உள்நாட்டு செய்திகள்

போதிய உணவின்றி வீதிகளில் உயிரிழக்கு கால்நடைகள்! உருக்கமான வேண்டுகோள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடைகளுக்கான உரிய மேச்சல் தரவைகள் இன்மையால் மீள்குடியேறிய காலம் முதல் இன்றுவரை தாம் அவதியுறுவதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி ,மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன காணப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து சுமார் 11 ஆண்டுகளை கடந்துள்ள போதும் தமது வாழ்வாதார நிலைமைகளை கொண்டு செல்ல முடியாது தத்தளிக்கின்ற மக்களுடைய வாழ்வில் தங்களுடைய வாழ்வாதார தொழில்களை திருப்தியாக செய்ய முடியாத சூழல் தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

விவசாயிகளின் விவசாய நிலங்கள் விடுவிப்பாக இருக்கட்டும், மீனவர்களுடைய மீன்பிடி பிரச்சினைகளாக இருக்கட்டும், கால்நடை வளர்ப்போராக இருக்கட்டும் அனைவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பும் ஒரு பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படுகின்றது. இருந்த போதும் இன்று வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த ஒரு மேய்ச்சல் தரவையும் இல்லாத ஒரு நிலைமை தொடர்ச்சியாக காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் வைத்திருக்கின்ற போதும், மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் இன்றுவரை மேய்ச்சல் தரவையில்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் குளங்களினுடைய அலை கரைகள் மற்றும் வீதியோரங்களை நம்பி இந்த கால்நடைகளை மேய்ப்பவர்களிருக்கின்றனர். அத்துடன் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற நெற்செய்கைகளால் கால்நடைகளை வளர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக வயல் விதைக்கப்படுகின்ற காலப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பதற்காக பண்ணையாளர்கள் மிகவும் துன்பப்படுகின்ற நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. வீதியோரங்களில் கால்நடைகளை வளர்ப்பதால் வீதியில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாத்திரமல்லாமல் வீதியோரத்தில் கால்நடைகள் உணவு கிடைக்காது உயிரிழக்கின்ற நிலைமையும் ஏற்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கால்நடைகளுக்கான எந்த மேச்சல் தரவையும் இல்லாத நிலையில் இவ்வாறு கால்நடைகளுக்கு போதிய உணவு இல்லாமல் மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் இன்று வரை உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் மிக விரைவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைத்து தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக தற்காலத்தில் வீதிகளின் ஓரங்களில் மாத்திரமே கால்நடைகளை மேய்க்கக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் ஏனைய இடங்களில் பயிர்ச்செய்கைகள் காரணமாக கால்நடைகளை வளர்க்க முடியாத நிலைமை இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் கவனம் கொள்ளுமாறும் கேட்டுள்ளனர். தொடர்ச்சியாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காலங்களில் இவ்வாறான ஒரு பாரிய சிக்கல் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் எனவே எதிர்வரும் நெற்செய்கைக்கு முன்னதாகவாவது தமக்கான மேய்ச்சல் தரவைகளை அமைத்து தந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top