முகக்கவசம் அணியாது வீதியில் பயணம் செய்த 13 பேரை மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்ததுடன் இவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதனால் கிழக்கு மாகாணத்திலும் நூற்றுக்கணக்கானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் தொடர்ந்தும் கவலையீனமாக முகக்கவசமின்றி நடமாடுபவர்களைக் கைது செய்ய ஏறாவூர்ப் பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ஏறாவூர் பிரதான வீதியில் பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
