மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் அரச அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மயிலத்தனை மேச்சல்தரை பிரச்சனை மற்றும் 20வது திருத்த சட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் நினைவு இல்லத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பொ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான M.A. சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இக் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்கின்ற உத்தரவு எவ்வாறு வந்தது? சட்டத்தினை தன்னுடைய கடமையினை சரியாக செய்ததன் காரணமாக இன்று அரச அதிபர் பழிவாங்கப்பட்டிருக்கிறார். அரசியல் பழிவாங்கல்களுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினை வைத்து எவ்வளவோ விடயங்கள் பேசப்படுகின்ற போது இங்கே நேரடியாக இன்று இந்த அரசாங்கத்தினால் நேரடியாக அரசியல் பழிவாங்கல் நடந்திருக்கிறது. ஒரு அரச அதிகாரி ஓர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் இதற்கான கண்டனத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டதுடன் மிகவும் கடுமையாக இதனைக் கண்டிக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
இதேய வேளை மயிலத்தனை மேச்சல் தரை பிரச்சனை தொடர்பில் நேற்றைய தினம் ஊடங்கள் வாயிலாக மட்டக்களப்பு மக்களுடைய பிரச்சனை பற்றிய உண்மையினை அரச அதிபர் நடுநிலையாக நேர்மையாக எடுத்து குறிப்பிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசினுடைய இச் செயற்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பல புத்திஜீவிகள் தங்களுடைய கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
