அரசியல்

வங்காள விரிகுடாவில் சூறாவளியின் நிலை! வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று 08.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய தினத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பானது நேற்ற நண்பகல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தது.

மேலும், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மணித்தியாலத்திற்கு 60 – 80 கிலோமீற்றர் அளவிலான பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மூன்று மாகாணங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையம் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top