உலகம்

வந்துவிட்டது செயற்கை இறைச்சி.. அனுமதி கொடுத்த சிங்கப்பூர்..

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதை மையப்படுத்தி செயற்கை இறைச்சி எப்படித் தயாராகிறது, அது நல்லதுதானா, இந்த இறைச்சி இந்தியாவுக்கு விற்பனைக்கு வருமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
`செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி.’ கடந்த சில நாள்களாக அசைவ உணவுப் பிரியர்கள் இந்தச் செய்தி குறித்துதான் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். கண் முன்னே வெட்டி விற்கப்படும் ஆட்டிறைச்சிக்கும், உயிர் கோழிகளுக்கும், உயிர் மீன்களுக்கும் இங்கே தனி மவுசு இருக்கிறது. `பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சியே புதியதுதானா… ஒரிஜினலா என்று கண்டுபிடிக்க முடியாது; இரண்டுக்குமான சுவை மாறுபடும்’ என்பது இங்கு பொதுவான கருத்தாக இருக்கிறது. இப்படியான சூழலில்தான், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதை மையப்படுத்தி செயற்கை இறைச்சி எப்படித் தயாராகிறது, அது நல்லதுதானா, இந்த இறைச்சி இந்தியாவுக்கு விற்பனைக்கு வருமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

எப்படி உருவாகும்?
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை ஈடுகட்டுவதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் மாற்று இறைச்சியை உருவாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கின்றன. இப்படியான பல முயற்சிகள் நடந்துகொண்டிருந்தாலும், செயற்கை இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர்தான் முதன்முதலில் அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஈட் ஜஸ்ட் (Eat Just) எனும் கலிஃபோர்னிய நிறுவனம்தான் இந்த செயற்கை கோழி இறைச்சியைத் தயாரித்துள்ளது. விலங்குகளின் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது `வளர்ப்பு இறைச்சி (Cultured meat)’ என்று வகைப்படுத்தப்படுகிறது. கோழியின் `செல்’களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து ஆய்வகத்தில் இந்த செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறதாம்.

விலங்குகளைக் கொல்ல வேண்டியதில்லை!
இதுகுறித்துப் பேசியிருக்கும் `ஈட் ஜஸ்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜோஷ் டெட்ரிக், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் இறைச்சி உண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை இறைச்சி உண்ணும்போதும் அதற்காக நாம் விலங்குகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் `இறைச்சி சாப்பிடுவது மனிதாபிமானமற்ற செயல்’ என விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். இனிமேல் அப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. செயற்கையாக உருவாக்கப்படும் இறைச்சிக்கு முதன்முதலாக சிங்கப்பூர் ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா நாடுகளிலும் ஒப்புதல் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். `இந்த செயற்கை கோழி இறைச்சியில் உள்ள மூலப்பொருள்களில் நச்சுத்தன்மை இருக்கிறதா, உணவுப் பொருள் தரம் தொடர்பான விதிமுறைகளை இந்த இறைச்சி பூர்த்தி செய்கிறதா என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்துளோம். இதன் தயாரிப்பு முறையை ஆய்வு செய்த பிறகுதான், இந்த இறைச்சியை சிங்கப்பூரில் விற்க அனுமதி அளித்துள்ளோம். இந்த இறைச்சியானது மனிதர்கள் உட்கொள்ள பாதுகாப்பானது” என்று சிங்கப்பூர் உணவு முகமை (Singapore Food Agency) அங்கீகரித்திருக்கிறது.

இது பைத்தியக்காரத்தனம்!
அறச்சலூர் செல்வம் இது தொடர்பாகத் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “மனிதன் தான் எதிர்கொள்ளக்கூடிய எல்லா பிரச்னைகளுக்கும் அவனுடைய கற்பனையையும் அறிவியலையும் பயன்படுத்தி தீர்வு கண்டுவிடலாம் என்று நினைப்பதன் விளைவுதான் இதெல்லாம். ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படும் இது இறைச்சி போல இருக்குமே ஒழிய, இறைச்சியாக இருக்க முடியாது. ஏனெனில், இறைச்சி என்பது இயற்கை, சூழலியல், உயிர் சார்ந்த விஷயம். கோழியின் செல்லை மட்டும் எடுத்து ஆய்வுக்கூடத்தில் வளர்த்து… கோழி இறைச்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கோழியிலிருந்து வந்தால்தானே அது கோழி இறைச்சி? இவர்கள் உருவாக்கும் இறைச்சிக்கு உயிர் இருக்கிறதா? உயிரில்லாத ஒன்றை உருவாக்கி வைத்துக்கொண்டு அது இறைச்சியின் சுவையுடன் இருப்பதால் மட்டுமே அதை இறைச்சி என வகைப்படுத்துவது தவறு. வேண்டுமானால், இறைச்சியில் உள்ள சத்துக்களெல்லாம் அதில் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், இது அறம் சார்ந்தது கிடையாது. முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த விஷயம். அதை உண்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, `இது நல்லது!’ என்றும் சொல்லிவிட முடியாது. நம் மூளை எந்தளவுக்கு கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்… மாடுகள் தாவரங்களைச் சாப்பிடக் கூடியது. மாமிசத்தை சாப்பிடாது. ஐரோப்பிய நாடுகளில் மாட்டிறைச்சியில் மிச்சமான எலும்புகளை பொடியாக்கி தீவனமாக மாற்றினார்கள். அந்தத் தீவனத்தை மாடுகளுக்கும் கொடுத்தார்கள். விளைவு, மாடுகளுக்கு `mad cow disease’ என்ற நோய் பரவியது. இந்த நோயால் லட்சக்கணக்கான மாடுகள் கொத்துக் கொத்தாக இறந்தன. அதைத் தொடர்ந்து, மாட்டிறைச்சி கடைகளில் `இது mad cow disease-ஆல் பாதிக்கப்படாத மாட்டிறைச்சி’ என்று விளம்பரம் செய்து விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த விளம்பரம் தயாரித்துக் கொடுத்தவன்தான் நிறைய பணம் சம்பாதித்தான்.

குடுவைக்குள் இறைச்சியை வளர்த்தெடுக்கிறேன் என்பது சுத்த பைத்தியக்காரத்தனம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பிரபலபடுத்துவதற்காக `பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் ரசாயனம் கொண்டு வளர்க்கப்படுகின்றன. அதைச் சாப்பிடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. செயற்கை இறைச்சியில் அப்படியான பிரச்னைகள் வராது’ என்றெல்லாம் சொல்கின்றனர். நம் உணவில் ரசாயனம் கலந்ததற்குக் காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும் தவறான உணவு உற்பத்தி முறைதான். அதைச் சரி செய்வதற்கு பிரச்னையின் மூலத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டுமே ஒழிய, அதைவிடுத்து, இன்னொரு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு தேடுவது சரியாகாது. அது இன்னொரு பிரச்னையை உருவாக்கும். அந்தப் பிரச்னைக்கு இன்னொரு தொழில்நுட்ப தீர்வைத் தேடி அலைவோமா? உலகம் முழுவதும் மாறிவரும் உணவு உற்பத்தி முறையினால்தான் காடுகள் அழிப்பு ஏற்பட்டிருக்கிறது. கரியமில வாயு அதிகமாகியிருக்கிறது. ரசாயன உரங்கள் அதிகரித்திருக்கின்றன. உணவு, தொழிற்சாலைகளின் கையில் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கு இயற்கை சார்ந்து உணவு உற்பத்தி முறையை மாற்றி அமைப்பதுதான் தீர்வு. அதைவிடுத்து செயற்கையாக இறைச்சி தயாரிக்கிறேன் என்று இறங்கினால் அது வேறு மாதிரியான விளைவுகளை உருவாக்கும். அதுமட்டுமல்ல, இதன் மூலம் நம் உணவை மறுபடியும் நாம் தொழில்நுட்பத்தின் கையிலும் தொழில் நிறுவனங்களின் கையிலும் கொடுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியில் இது தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் போய்தான் முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

30 ஆண்டுகளுப் பிறகு ஆதிக்கம் செலுத்தும்!
இதுதொடர்பாக `மீட் சயின்ஸ் & டெக்னாலஜி’ துறையின் உதவிப் பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், “செயற்கை இறைச்சி தயாரிப்பதற்கான முயற்சி என்பது இப்போது தொடங்கியதல்ல, 1908-ம் ஆண்டே, டாக்டர் அலெக்ஸிஸ் கேரல் (Alexis Carrel) என்பவர் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அப்போதிலிருந்து இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2001-லிருந்து நாசா வான்கோழியின் `செல்’லிருந்து செயற்கை இறைச்சியை உருவாக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுவருகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகமும் செயற்கை இறைச்சிக்கான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளது. இப்படி பல ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம், `இன்னும் 30 ஆண்டுக்களுக்குப் பிறகு, செயற்கை இறைச்சிதான் இறைச்சி சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும்’ என்று வளர்ந்த நாடுகளால் கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் சிங்கப்பூரில் செயற்கை இறைச்சிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை வகை இறைச்சி `டிசைனர் மீட்’ (designer meat) என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், நமக்குத் தேவையான சத்துக்களுடன் நமக்குத் தேவையான அளவில் இதை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இறைச்சி உண்பவர்களில் பல வகையினர் இருக்கின்றனர். உயிர்களைக் கொல்லாமல் இறைச்சி உண்ண விரும்புகிறவர்களுக்கும் தங்களுக்குத் தேவையான சத்துக்கள் குறிப்பிட்ட அளவில் உள்ள இறைச்சிகளை மட்டுமே உண்ண விரும்புகிறவர்களுக்கும் இந்த செயற்கை இறைச்சியானது மாற்றாக அமையும். ஆனால், இதைத் தயாரிப்பதற்கான முக்கியமான மூலக்கூறான `bovine serum albumin’ மிகவும் விலை உயர்ந்தது. எனவே, இந்த `லேப் மீட்’டின் விலை அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் விலை அதிகமாக இருந்தாலும் உற்பத்தி பெருகும்போது விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், இயற்கைக்கு மாறான விஷயங்களைச் செய்யும்போது ஏதாவொரு பக்க விளைவு ஏற்படும் என்பதுதான் இயற்கையின் நீதி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இந்த செயற்கை இறைச்சியால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது அது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே தெரியவரும். இது இந்தியாவுக்கு வருமா என்று கேட்டால், தங்கள் நாட்டின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டிலேயே இயற்கையாக உற்பத்தி செய்ய இயலாத சிங்கப்பூர் மாதிரியான நாடுகளில்தான் இதன் வளர்ச்சி தொடங்கும். அதன்பிறகு படிப்படியாக மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியா போன்ற விவசாய பின்புலம் கொண்ட நாடுகளில் செயற்கை இறைச்சி காலூன்றுவதற்கு வெகு காலம் பிடிக்கலாம். ஏனெனில், இந்தியர்களின் மனநிலை முற்றிலும் வேறானது. இதை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் பணத்துக்கு விற்கப்படும் என நாம் எதிர்பார்த்திருப்போமா? அந்த வகையில் செயற்கை இறைச்சியும் நமக்குள் ஊடுருவலாம். அப்படி நடக்கும்பட்சத்தில், அதற்கு முன்பு வல்லுநர்கள் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும்.” என்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top