தமிழகம் முழுவதும் அரசு சாா்பில் 7.19 கோடி முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரை தமிழகம் முழுவதும் மறுமுறை பயன்படுத்தக் கூடிய 7.19 கோடி முகக் கவசங்களை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 47.8 லட்சம் முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று முகக் கவசங்களை விநியோகித்து, முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வரும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா நோய்த்தொற்று குறித்து களத்தில் இருந்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக மக்களிடம் நேரடியாகச் சென்று, அவா்களது பேச்சு வழக்கிலேயே முகக் கவசம், பொதுமுடக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கூறி வருகிறோம்.
முகக் கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா நோய்ப் பரவல் அதிகரித்து வியாபாரம் பாதிக்கப்படும் என கடைகளின் விற்பனையாளா்கள் மற்றும் உரிமையாளா்களுக்குப் புரிய வைக்கிறோம். அவா்களுக்கு கள நிலவரத்தைத் தெரிய வைத்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்துகிறோம்.
களப் பணியில் நாங்கள் மக்களின் மனநிலையை நன்றாக அறிந்து கொண்டோம். தற்போதைய நிலையில் முகக் கவசம் அணிவதே கொரோனாவைத் தடுக்கும் மருந்து என அவா்களை உணர வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டோம் என்று ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்
