உலகம்

பெண்ணை கடத்தி மணமகளாக்கும் விநோத வழக்கம் கொண்ட நாடு: பலியான இளம்பெண்

கிர்கிஸ்தான் நாட்டில், ஒரு ஆண் தான் பார்க்கும் ஒரு பெண் மீது ஆசைப்பட்டால், அவளைத் தன் வீட்டுக்குக் கடத்திக்கொண்டு சென்று, கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் கடிதம் பெற்று அவளைத் திருமணம் செய்துகொள்ளும் ஒரு வழக்கம் இருந்தது.

1991ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றபின், அது குறையத் தொடங்கியது. 2013இல் அப்படி ஒரு பெண்ணைக் கடத்தி திருமணம் செய்வது குற்றம் என சட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனாலும், இன்னமும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருப்பது, தற்போது நடந்த ஒரு துயர சம்பவம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திங்கட்கிழமை, வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த Aizada Kanatbekova (27) என்ற அழகிய இளம்பெண்ணை மூன்று பேர் கடத்தும் காட்சிகள், CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

வலுக்கட்டாயமாக இரண்டு பேர் Aizadaவை காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து விரைய, மூன்றாவது நபர் மற்றொரு காரில் அவர்களை பின்தொடர்ந்துள்ளார்.

புதன்கிழமையன்று அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், காரின் பின் இருக்கையில் Aizada சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

அதே காரில், கடத்தியவர்களில் ஒருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தப்பிக்க Aizada போராடும்போது அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அவரைக் கடத்திய ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது. சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் மக்களை கொதிப்படையச் செய்துள்ளதால், சுமார் 500 பேர் திரண்டு, உள்துறை அமைச்சகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெளிவாக CCTV கமெராவில் காரின் நம்பர் பிளேட் உட்பட அத்தனை விடயங்களும் பதிவாகியும், சரியான நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்திருந்தால் Aizadaவைக் காப்பாற்றியிருக்கலாமே என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top