ஆன்மீகம்

இன்று சனிப்பிரதோஷம் – சிவபெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்து வந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் சனிப்பிரதோஷம் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.  தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.

இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். சிவபெருமானுக்கும் அவரின் வாகனமான நந்திதேவருக்கும் உரிய அற்புதமான நாளில், பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வதும் அபிஷேகப் பொருட்களும் மலர்களும் சமர்ப்பித்து தரிசிப்பதும், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள்!

சனிப்பிரதோ‌ஷத்தையொட்டி சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பிரதோ‌ஷ நாளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்திலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த பிரதோ‌ஷ நிகழ்ச்சி யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இருப்பினும் சில சிவன் கோவில்களில் இன்று பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

பாடி சிவன் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top